பெரியார்

மகளிர் சிந்தனை டிச 2020 இதழில் வெளிவந்த எனது கட்டுரை ----++++---- பெரியார்- 1879 செப்டம்பர் 15 முதல், 1973 டிசம்பர் 24 வரை, 94 ஆண்டுகள் வாழ்வாங்கு வாழ்ந்த லட்சியப் போராளி. அவருடைய நீண்ட நெடிய வாழ்நாளில், இந்தச் சமூகம் பகுத்தறிவு பெற்று சுயமரியாதையுடன் வாழ வேண்டும் என்பதற்காக இறுதிவரை சிந்தித்தார், செயல்பட்டார். பகுத்தறிவாளரான சூழல் ஈரோட்டில் அவரது தந்தை வெங்கட்ட நாயக்கர், அரசர்களும், ஜமீன்தார்களும் சகவாசம் வைத்துக்கொள்ளும் அளவுக்கு செல்வம் படைத்த, மிகப்பெரும் வணிகர். என்றாலும் அவர் பிறவிப் பணக்காரர் அல்ல. கல்தச்சர்களுக்கு கையாள் வேலை செய்துதான் வாழ்க்கையைத் தொடங்கி இருக்கிறார். பெரியாரின் தாயார் சின்னத்தாயம்மையாரும் கணவருடன் இணைந்து கல்சுமக்கும் வேலை பார்த்திருக்கிறார். பிற்காலத்தில் வெங்கட்ட நாயக்கர் குடும்பம் வண்டி மாடு வாங்கி, காசு பணம் சேர்த்து, மளிகைக்கடை வைத்து, கமிஷன் மண்டி, மொத்த கொள்முதல் -என, ஈரோட்டின் மிகப்பெரும் வணிகக்குடும்பமாக, வளர்ந்தது. அந்தக் காலத்தில் இந்தத் தம்பதிக்கு இரண்டாவது மகனாகப் பிறந்தவர் பெரியார். அவரது பெற்றோர் ‘அக்மார்க்’ பெருமாள் பக்தர்கள் என்பத...