பெரியார்


மகளிர் சிந்தனை டிச 2020 இதழில் வெளிவந்த  எனது கட்டுரை

----++++----

பெரியார்- 1879 செப்டம்பர் 15 முதல், 1973 டிசம்பர் 24 வரை, 94 ஆண்டுகள் வாழ்வாங்கு வாழ்ந்த லட்சியப் போராளி. அவருடைய நீண்ட நெடிய வாழ்நாளில், இந்தச் சமூகம் பகுத்தறிவு பெற்று சுயமரியாதையுடன் வாழ வேண்டும் என்பதற்காக இறுதிவரை சிந்தித்தார், செயல்பட்டார். 

பகுத்தறிவாளரான சூழல்

ஈரோட்டில் அவரது தந்தை வெங்கட்ட நாயக்கர், அரசர்களும், ஜமீன்தார்களும் சகவாசம் வைத்துக்கொள்ளும் அளவுக்கு செல்வம் படைத்த, மிகப்பெரும் வணிகர். என்றாலும் அவர் பிறவிப் பணக்காரர் அல்ல. கல்தச்சர்களுக்கு கையாள் வேலை செய்துதான் வாழ்க்கையைத் தொடங்கி இருக்கிறார். பெரியாரின் தாயார் சின்னத்தாயம்மையாரும் கணவருடன் இணைந்து கல்சுமக்கும் வேலை பார்த்திருக்கிறார். பிற்காலத்தில் வெங்கட்ட நாயக்கர் குடும்பம் வண்டி மாடு வாங்கி, காசு பணம் சேர்த்து, மளிகைக்கடை வைத்து, கமிஷன் மண்டி, மொத்த கொள்முதல் -என, ஈரோட்டின் மிகப்பெரும் வணிகக்குடும்பமாக, வளர்ந்தது. அந்தக் காலத்தில் இந்தத் தம்பதிக்கு இரண்டாவது மகனாகப் பிறந்தவர் பெரியார். அவரது பெற்றோர் ‘அக்மார்க்’ பெருமாள் பக்தர்கள் என்பதால் அவருக்கு ராமசாமி எனப் பெயரிட்டார்கள். 

ஈ.வெ.ரா பகுத்தறிவாளராக வளர்ந்ததற்குக் காரணம் அவர் வீட்டுச் சூழல் எனலாம். அவருடைய பெற்றோர் பணக்காரர்களான பிறகு, அவருடைய வீட்டில் கூடுதலாகவே பக்திமனம் கமழ்ந்திருக்கிறது. “...சைவம், வைணவம், ஆகிய இரு சமய சம்பந்தமாக உள்ள கதைகளோ, சரித்திரங்களோ சதாசர்வ காலம் எங்கள் வீட்டில் இரு சமய பக்தர்களாலும், பண்டிதர்களாலும் காலட்சேபம் செய்யப்பட்டு வந்ததால்...எனக்குச் சமய சம்பந்தமான, புராண சம்பந்தமான விஷயங்கள் தாமாகவே தெரியும்படி ஆகிவிட்டன. அவற்றிலிருந்தே தான் பல கேள்விகள் கேட்கவும், அவர்கள் கேள்விகளுக்குப் பதில் தாறுமாறாகவும், ஆளுக்கு ஒரு விதமாகவும் சொல்லவுமாய் இருந்ததே, எனக்கு மேலும் அதிக உற்சாகத்தை விளைவித்ததோடு, என்னைக் “கெட்டிக்காரப் பேச்சுக்காரன்” என்று அக்கம் பக்கத்தில் உள்ளவர்கள் சொல்லவுமான நிலைமை ஏற்பட்டது...

இந்தச் சம்பவங்கள்தான் எனக்கு மேலும் மேலும் சாதியிலும், மதத்திலும், கடவுள், சாஸ்திரங்கள், புராணங்கள் ஆகியவைகளிடத்திலும் நம்பிக்கையில்லாமல் போகும்படி செய்திருக்கலாம் என்று நினைக்கிறேன்” என்று சொல்லி இருக்கிறார், பெரியார். 

இந்த உலகத்தில் மனிதரை மனிதர் சுரண்டும் நிலை ஏன் இருக்கிறது? ஆணுக்குப் பெண் ஏன் அடிமையாக இருக்கிறாள்? இந்தியச் சூழலில் மதமும், சாதி அமைப்பும், பார்ப்பனீயமும், கடவுள் நம்பிக்கையும் ஆணாதிக்கமும் சுரண்டல் அமைப்பைத் தக்கவைப்பதில் வகிக்கும் பாத்திரம் என்ன என்பதைப் பற்றியெல்லாம் தெளிவுற சிந்தித்து தர்க்கம் செய்து, அவற்றை ஒழிக்க இறுதிவரை பாடுபட்டார்.

சமதர்மப் பிரச்சாரம்

பெரியாரின் தந்தையார், தன் பெயரில் இருந்த கடைக்குப் பெரியாரின் பெயரை மாற்றி, வணிகத்தைக் கவனித்துக்கொள்ளும் பொறுப்பை அவரிடம் விட்டார். இந்தக் காலகட்டத்தில் பெரியாரின் பொதுத்தொண்டு மேன்மேலும் வளர்ந்தது. ஈரோட்டில் பல பொதுநிலையங்களில் உறுப்பினராகவும், நிர்வாகியாகவும் பதவி வகித்தார். ஈரோட்டின் சேர்மனாக திறம்பட செயலாற்றி இருக்கிறார். இந்தக் காலகட்டத்தில் காந்தியின் ஒத்துழையாமை இயக்கமும், சட்ட மறுப்பு இயக்கமும், தீண்டாமை ஒழிப்பும், மது விலக்கும் அவரை ஈர்க்கவே, காங்கிரஸில் இணைந்து பிரேதச கமிட்டி செயலாளர் பொறுப்பு வரை வகித்துள்ளார். சிறு வயது முதலே சாதி முறையையும், தீண்டாமையையும் ஒழித்துக்கட்ட வேண்டும் என்ற பற்றுறுதி கொண்ட பெரியாருக்கு, சேரன்மாதேவி குருகுலத்தில், பார்ப்பன சமூகக் குழந்தைகளுக்கு தனி பந்தி நடத்தப்பட்டது கடுங்கோபத்தை ஏற்படுத்தியது. இந்தப் பிரச்சனையைக் காந்தி சரியாகக் கண்டிக்காமல், வர்ணாசிரம, சனாதன முறையின் ஆதரவாளராக இருந்தது பெரியாரைக் காயப்படுத்தியது. படிப்படியாக காங்கிரஸை விட்டு வெளியேறி, சுயமரியாதை இயக்கப் பிரச்சாரத்தைத் தொடங்கினார். நீதிக்கட்சியை ஒடுக்கப்பட்டோர் நலனுக்கான கட்சியாக மாற்றுவதில் கவனம் செலுத்தினார். 

இந்தியாவின் சமூக ஒடுக்குமுறைகளுக்கு ஆணிவேர் பொருளாதார அமைப்புகள் என்பதை உணர்ந்திருந்தவர் பெரியார். கம்யூனிச தத்துவம் உலகெங்கும் ஏற்படுத்திவந்த மாற்றத்தை அவர் தீவிரமாகக் கவனித்து வந்திருக்கிறார். 1927ல் நாகப்பட்டினம் ரயில்வே தொழிலாளர்கள் நடத்திய போராட்டத்துக்கு ஆதரவளித்து, அரசு உத்தரவை மீறி கூட்டம் போட்டு, சொற்பொழிவு நிகழ்த்தி கைதுசெய்யப்பட்டிருக்கிறார். 1931 ஆம் ஆண்டில் மேலைநாடுகளில் அரசியல் இயக்கங்களை ஆராய்வதற்காக எகிப்து, கிரீஸ், துருக்கி, ரஷ்யா, ஜெர்மனி, இங்கிலாந்து, இத்தலி, ஸ்பெயின், பிரான்சு, போர்ச்சுகல், இலங்கை ஆகிய நாடுகளுக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டார். 

சோஷலிச ரஷ்யாவில் மூன்று மாதங்கள் அரசாங்க விருந்தினராகத் தங்கி அங்கு சோஷலிசம் உருவாக்கிய மாபெரும் மாற்றங்களைக் கண்டார். இந்தியாவுக்குத் திரும்பும் முன் இலங்கையில் அவர் ஆற்றிய உரையில், தொழிலாளர் முன்னேற்றம், பெருளாதார சமத்துவம், மற்ற நாட்டுத் தொழிலாளர்கள் அடைந்துள்ள உயர்ந்த நிலைமை, அவர்கள் ஒன்றுபட்டு உழைத்து நன்மை பெறும் வழி, முதலாளிமார்களால் தொழிலாளிகளுக்கு உண்டாகும் துன்பங்கள், அத்துன்பங்களை நீக்கி தொழிலாளர்கள் முன்னேறும் வழிகள், ஆகியவற்றைப் பற்றி உரையாற்றி இருக்கிறார். 

மேல்நாட்டு சுற்றுப்பயணத்திற்குப் பிறகு சுயமரியாதை இயக்கத்தில் மாற்றம் செய்தார் பெரியார். சமுதாயச் சீர்திருத்த இயக்கமாக இருந்த சுயமரியாதை இயக்கத்தை சமதர்மப் பிரச்சாரத்தையும் (கம்யூனிசத் தத்துவப் பிரச்சாரம்) முன்னெடுக்கும் அரசியல் இயக்கமாகவும் மாற்ற எண்ணினார், எனப் பெரியாரின் வாழ்க்கை வரலாற்றை அவர் காலத்திலேயே எழுதிய, சாமி சிதம்பரனார் குறிப்பிட்டுள்ளார். தோழர் சிங்காரவேலரை அழைத்து ஆலோசனைகள் மேற்கொண்டு, ஈரோட்டில் தனது வீட்டிலேயே கூட்டம் கூட்டினார் பெரியார். இக்கூட்டத்தில் சிங்காரவேலர், பெரியார், ஜீவானந்தம் கம்யூனிச தத்துவம் எத்தகைய மாற்றத்தை நம் சமூகத்தில் ஏற்படுத்தும் என்பதை விளக்கிப் பேசியிருக்கிறார்கள். இந்தக் கூட்டத்தில்தான், ஈரோட்டுப் பாதை எனும் சுயமரியாதை சமதர்ம இயக்கத்துக்கான செயல்திட்டத்தை அறிமுகப்படுத்தினார் பெரியார். பிறகு ஜில்லா வாரியாக சமதர்மக் கொள்கை எப்படி சமூக ஒடுக்குமுறைகளையும், மனிதரை மனிதர் சுரண்டும் நிலையையும் ஒழிக்கும் எனப் பிரச்சாரக்கூட்டங்களை மிகுந்த ஆர்வத்துடன் நடத்தினார். “பொருளாதாரத் துறையிலும், அரசியல் துறையிலும், வேலை செய்யாமல் சமூக முற்போக்கு எப்படி ஏற்படும்? ஒரு சமூகத்துக்குப் பொருளாதாரமும் அரசியலும் அவசியமாவது அல்லவா? இந்த இரண்டையும் விட்டுவிட்டுச் செய்யும் முற்போக்குக்காக நமது சுயமரியாதை இயக்கம் தேவையே இல்லை.” என்று 1933 ஆம் அண்டு ஏப்ரல் மாதம் நடைபெற்ற திருப்பத்தூர் மாநாட்டில் ஈரோட்டுப் பாதை திட்டம் பற்றி பேசினார். 

சுயமரியாதை இயக்கத்தின் சமதர்மப் பிரச்சாரம் ஏற்படுத்தி வந்த தாக்கத்தைக் கண்ட பிரிட்டிஷார் அவர் மீதும், அவருடைய இயக்கத்தார் மீதும் அடக்குமுறையை ஏவத்தொடங்கினார்கள். ‘இன்றைய ஆட்சிமுறை ஏன் ஒழிய வேண்டும்?’ எனும் தலைப்பிட்ட குடியரசுத் தலையங்கத்துக்காக 1933 ஆம் அண்டு டிசம்பரில் கைதுசெய்யப்பட்டார். “நான் ஏன் ஆத்திகனானேன்?” எனும் பகத்சிங்கின் நூலை மொழிபெயர்த்ததற்காகப் தோழர் ஜீவாவும், அதைப் பிரசுரித்ததற்காக பெரியாரின் அண்ணன், ஈ.வே.கிருஷ்ணசாமியும் கைதுசெய்யப்பட்டார்கள். ஒரு கட்டத்தில் கம்யூனிச தத்துவப் பிரச்சாரத்தில் ஈடுபட்டால், அரசாங்கத்தின் அடக்குமுறைக்கு ஆளாக நேரிட்டு, சமூகசீர்திருத்தப் பணிகளை மேற்கொள்ள முடியாமல் போய்விடும் என்று கருதி சமூகசீர்திருத்தப் பிரச்சாரத்தை மட்டுமே செய்வது என முடிவெடுத்தார் பெரியார். பெரியார் போன்ற வீச்சான ஒரு செயற்பாட்டாளர் பொதுவுடைமைக் கொள்கை பிரச்சாரத்தைக் கைவிடுவது என்று முடிவெடுத்தது, தமிழகத்தின், இந்தியாவின் முற்போக்கு இயக்கங்களுக்கு ஏற்பட்ட கெடுவாய்ப்பே.  

பெண்ணியம் 

பெண்ணுரிமை குறித்தும், ஆணாதிக்கத்துக்கு எதிராகவும், பெரியார் சென்ற நூற்றாண்டின் தொடக்கம் முதல், தன்னுடைய வாழ்நாளின் இறுதிவரை பிரச்சாரம் செய்தார்.

“ஒரு ஆணுக்கு ஒரு சமையல்காரி; ஒரு ஆணின்  வீட்டுக்கு காவல்காரி; ஒரு ஆணின் குடும்பப் பெருக்கிற்கு ஒரு பிள்ளை விளைவிக்கும் பண்ணை; ஒரு ஆணின் கண் அழகிற்கும், மனப் புளங்காகிதத்திற்கும் ஓர் அழகிய அலங்கரிக்கப்பட்ட பொம்மை என்பதல்லாமல் பெண்கள் பெரிதும் எதற்குப் பயன்படுகிறார்கள், பயன்படுத்தப் படுகிறார்கள் என்பதைச் சிந்தித்துப் பாருங்கள்! இது என்ன நியாயம்? மனித சமுதாயம் தவிர, மற்றபடி மிருகம், பட்சி, பூச்சி, ஜந்து முதலியவைகளில் வேறு எந்த ஜீவனாவது, ‘ஆண்களுக்காகவே இருக்கிறோம் நாம்’ என்ற கருத்துடன், நடத்தையுடன் இருக்கிறதா என்று பாருங்கள்!” என்று சமூகத்தின் மனசாட்சியைத் தட்டி எழுப்பினார் பெரியார். 

தனக்கெனச் சொத்து, நிலம், உடைமை எனத் தனியுடைமை தோன்றிய பிறகுதான், கணவன் மனைவி வாரிசு - திருமண முறைகள் தோன்றின என்ற்பதைற அடிப்படை உண்மைகளைத் திருமண நிகழ்வுகளிலேயே பிரச்சாரம் செய்தார் பெரியார். 

“நான் ரஷ்யாவில் பார்த்தேன்.  திருமணம் என்ற அமைப்பும், ஏற்பாடும் இல்லாமலேயே வாழமுடியும் என்பதை. இதற்குக் கட்டுப்பாடற்ற காதல் என்று பெயர். இந்த முறையும், அங்கு அமுலில் வைத்து இருக்கிறார்கள். இது எப்படி சாத்தியமானது என்றால், அந்நாட்டு மக்கள் சோற்றைப் பற்றிக் கவலையில்லாமல் வாழ்கிறார்கள்; சுதந்திரமான வாழ்க்கை ஆண்-பெண் உறவிலும் நடத்துகிறார்கள். சொத்து வாரிசுரிமை இருப்பதால்தான் நம்முடைய சமுதாயத்தில் கட்டுப்பாடு உள்ள குடும்ப முறை ஏற்படுத்த வேண்டிய நிலைமை ஏற்பட்டது. இதைத்தான் உயர்ந்த முறை எனக் கூறி மதவாதிகள் வாழ்கிறார்கள். காதல் என்பதற்கும் கல்யாணம் என்ற ஏற்பாட்டிற்கும் எந்த விதத்திலும் சம்பந்தமில்லை.” என்று சொன்னார் பெரியார். பெண்ணுரிமை, ஆணாதிக்கம் குறித்த புரிதல் உள்ளவர்களால்கூட இன்றைக்கும், பெண்ணடிமைத் தனத்துக்கான அடிப்படைக் காரணிகளைக் களைவது குறித்து, இப்படிப் பெரியாரைப் போல வெளிப்படையாகப் பேச முடியுமா என்பது சந்தேகமே.

பெண்ணுரிமை, ஆண்-பெண் சமத்துவம் குறித்து பெரியார் செய்த பிரச்சாரம் என்பது, அந்தக் காலத்திற்கு மட்டுமல்ல, இந்தக் காலத்திற்கும் அதிபுரட்சிகரமானது; தமிழ்நாட்டின் பெண்கள் மேம்பாட்டில் புரட்சிகர தாக்கத்தை செலுத்தி இருக்கிறது. 

உருக்கு மனிதர் பெரியார்

தனிப்பட்ட வாழ்க்கை, பொது வாழ்க்கை எனப் பிரித்துப்பார்க்க முடியாத வாழ்க்கையை வாழ்ந்தவர் பெரியார். தனது மனைவி நாகம்மையார் இறந்தபோது, அவர் எழுதிய இரங்கல் உரையில், “எனது வாழ்நாள் சரித்திரத்தில், இனி நிகழப்போகும் அத்தியாயங்களோ, சிறிது விஷேச சம்பவங்களோ இருந்தாலும் இருக்கலாம் (ரஷ்ய சுற்றுப்பயணத்துக்குப் பிறகு சிங்காரவேலருடன் இணைந்து, சுயமரியாதை சமதர்ம இயக்கம் கண்டு, சோஷலிசக் கொள்கையைப் பரப்புவதற்கு அவர் ஈரோட்டுப் பாதை திட்டம் வகுத்திருந்த காலம் அது). அதை நாகம்மாள் இருந்து பார்க்க நேரிட்டால் அந்த அம்மாளுக்கு அவை மிகுந்த துக்கமாகவும் துயரமாகவும் இருக்கும் என்பதில் சந்தேகமிருக்காது. அத்துடன் அதைக்கண்டு சகியாத முறையில் யானும் சிறிது கலங்கக்கூடும். ஆதலால் நாகம்மாள் மறைவால் எனக்கு அதிக சுதந்திரம் ஏற்பட்டதுடன், “குடும்பத் தொல்லை” ஒழிந்தது என்கின்ற இரு உயர்பதியையும் அடைய இடமேற்பட்டது” என்றார். தனது அன்பு மனைவி இல்லாமல் போன நிலையை தனது செயல்பாட்டுக்கான சதந்திரமாகக் கருதி, அதை வெளிப்படையாகச் சொல்ல யாரால் முடியும்? ஆனால், பெரியாரால் முடிந்தது. அந்த அளவுக்கு பொதுவாழ்க்கையில் உறுதிகொண்டவராக அவர் இருந்திருக்கிறார். 

பிற்காலத்தில் 70 வயதில் மணியம்மையாரை அவர் மணந்ததற்கும் அவருடைய அதே பொதுவாழ்க்கைதான் காரணம். மணியம்மையுடன் இனைந்த வாழ்க்கையால் தனது இயக்கப் பணிகள், தன் காலத்திலும், தனக்குப் பிறகும் வலுவடையும் என்று கருதினார் பெரியார். பெரியாரைப் பொறுத்தவரை தனது ஆயுளைக் கூட்டிக்கொள்வது என்பது, தன்னுடைய பொதுவாழ்வின் ஆயுளைக் கூட்டுவது, தனது இயக்கத்தின் வலுவைக் கூட்டுவது என்பதே. 

பெரியாரைப் புரிந்துகொள்வது

இன்றைக்கு இந்துத்துவ தீய்சக்திகள் இந்தியா முழுவதும் கிளைபரப்பி வரும்சூழலில், தமிழ்நாட்டில் அவற்றால் காலூன்ற முடியாததைப் பார்க்கிறோம். இதற்கு பெரியாரின் பார்ப்பனீயத்துக்கு எதிரான, சனாதனத்துக்கு எதிரான, சாதி முறைக்கு எதிரான, மதங்கள், கடவுள் நம்பிக்கைக்கு எதிரான பிரச்சாரம் முக்கியக் காரணம். பெரியார் இந்தச் சமூகத்தில் ஏற்படுத்திய தாக்கங்களில் இது முக்கியமானது. 

“பெரியாரின் ஒட்டுமொத்தமான அடிப்படை இலட்சியங்கள் பார்ப்பான் – பஞ்சமத்தன்மை, ஏழை-பணக்காரத்தன்மை, படித்தவர்-படிக்காதவர் தன்மை, ஆண்-பெண் தன்மை ஆகியவற்றை ஒழித்தலாகும். அவர் இவற்றில் ஒன்றிரண்டுக்கு மட்டுமே முன்னுரிமை கொடுத்து, மற்றவற்றைப் பின்னுக்குத் தள்ள வேண்டியிருந்த வரலாற்று வரம்புகளையும், அவரது இயக்க வரம்புகளையும் கடக்காமல் பழைய வரலாற்றைத் திரும்ப நிகழ்த்திக் கொண்டிருப்பது அவருக்குப் பெருமை சேர்க்காது. மாறாக, அது அவரை வெறும் நாத்திகவாதியாகவோ, இட ஒதுக்கீட்டுக் கோரிக்கையாளராகவோ குறுக்கிவிடுபவர்களுக்கே பயன்படும்” என்கிறார்கள், பெரியாரைப் பற்றிய ஆய்வு நூலை இயற்றிய எஸ்.வீ.ஆரும், வ.கீதாவும்.

“நான் பல விஷயங்களில் அறிவுக்குறைவு உள்ளவனாக இருக்கக்கூடும்; பல தவறுகள் செய்திருக்கக்கூடும்; இன்றைய கருத்தில் இருந்து நாளை மாறுதல் அடையக் கூடும்; பல கருத்துகளை மாற்றியும் இருக்கிறேன்; இவை எல்லாம் எனது கண்ணியமான அனுபவம், ஆராய்ச்சியைக் கொண்டே இருக்குமே தவிர, பணம் சேர்க்கவோ, பதவி பெறவோ, வாழ்க்கையை மேம்படுத்திக் கொள்ளவோ கடுகளவு கூட காரணம் கொண்டதாய் இருக்காது” என்று தன்னைப் பற்றிக் கூறியவர் பெரியார்.  திறந்த மனத்துடன், அறிவியல் பார்வையுடன் பெரியாரைப் பார்ப்பவர்களால் இந்தக் கூற்று உண்மை என்பதை விளங்கிக்கொள்ள முடியும்.

“நான் சொல்லும் கருத்துகள் இன்று தலைகீழ்ப் புரட்சியாகச் சிலருக்குத் தோன்றுகின்றன. அடுத்த 20 வருடங்களில்-என்னையே ‘மகா பிற்போக்குவாதி’ என்று அன்றைய உலகம் கூறுமே! அறிவு வளர்ச்சியின் வேகம் அதிகமாயிருக்கிறதே! மாறுதலுக்குக் கட்டுப்பட்டதன்றோ உலகம்? மாறுதலுக்கு வளைந்துகொடாத மனிதன் மாய வேண்டியதுதானே!” என்றார். உண்மையான பகுத்தறிவுவாதி இப்படித்தான் இருக்க முடியும். பெரியார் அப்படித்தான் இருந்தார். 


Comments

  1. பெரியார் குறித்து ஆழ்ந்த வாசிப்பும் தெளிவான பார்வையும் கொண்ட சிறப்பான பதிவு

    ReplyDelete

Post a Comment

Popular posts from this blog

தாய்வழிச்சமூகமும் நாயர் சமூகமும்

உலகத் தொழிலாளர்களே ஒன்றுபடுங்கள்!