பூமியைப் பற்றிச் சொல்கிறோம்...
நவம்பர் 9 புகழ்பெற்ற வானியலாளர் கார்ல் சகானின் பிறந்த தினம்
அவர் வழிகாட்டியாக செயல்பட்டு நடத்திய, ஒரு சுவாரஸ்யான தகவல் பகிர்வு திட்டம் பற்றிய எனது கட்டுரை இது
பட்டம் மாணவர் பதிப்பில் 19.1.2017ல் வெளிவந்தது
விண்வெளியில் பூமியைத் தாண்டி கோடானுகோடி ஒளியாண்டு தூரம் நீங்கள் பயணம் செய்கிறீர்கள். பூமியைப் போன்ற ஒரு கோளைச் சேர்ந்த அறிவுத்திறன் மிக்க உயிரினங்களைச் சந்திக்கிறீர்கள். உங்களைப் பற்றியும், நீங்கள் வாழும் பூமியைப் பற்றியும் அவர்களிடம் சொல்ல வேண்டும். என்ன விதமான புகைப்படங்களையும் தகவல்களையும் உங்களது பயணத்தின்போது நீங்கள் எடுத்துச் செல்வீர்கள்?
இப்படி ஒரு சூழல், வருமா வராதா என்ற கேள்வி ஒரு புறம் இருந்தாலும், பூமியில் இருந்து ஆய்வு விண்கலங்களை விண்வெளிக்கு அனுப்பும்போது, விஞ்ஞானிகள் பூமியைப் பற்றிய சில முக்கியமான தகவல்களைத் தொகுத்து விண்கலங்களில் வைத்து அனுப்பி வருகிறார்கள்.
எப்போதாவது வேற்றுக் கிரகங்களைச் சேர்ந்த அறிவுஜீவிகள் நம் விண்கலன்களை எதிர்கொள்ள நேரிட்டால், நமது பூமி எப்படிப்பட்டது? அதன் இயற்கை வளங்கள் என்ன? எத்தகைய உயிரினங்கள் பூமியில் இருக்கின்றன? பூமியின் உயினங்களிலேயே அதிக அறிவுத்திறன் கொண்ட மனிதர்களாகிய நாம் எத்தகைய வாழ்க்கை வாழ்கிறோம்? நாம் அடைந்த வளர்ச்சிகள் என்ன? என்பதையெல்லாம் அந்த உயிரினங்கள் தெரிந்துகொள்ளும்.
பயனியர் விண்கலத் தகடு (Pioneer Plaque):
1972ஆம் ஆண்டில் விண்ணில் செலுத்தப்பட்ட பயனியர் 10, பயனியர் 11 விண்கலங்கள்தான், முதன்முதலில் பூமி பற்றிய தகவல்களைச் சுமந்து சென்றன. தங்கத்தாலும், அலுமினியத்தாலும் செய்யப்பட்ட இரண்டு தகடுகளில் ஆடையில்லா ஆண், பெண் உருவங்களையும், விண்கலம் புறப்பட்ட இடமான பூமியைப் பற்றி ஒரு சில விவரங்களைக் குறியீடுகளாகவும் பொறித்து, விண்கலத்தின் ஆண்டனா பகுதியில் பொருத்தி விஞ்ஞானிகள் அனுப்பினார்கள்.
பத்திரிகையாளரின் யோசனை:
எரிக் பர்கெஸ் (Eric Burgess) என்ற பத்திரிகையாளர், பயனியர் விண்கலத் திட்டத்தை அமெரிக்க விண்வெளி மையமான நாசா செயல்படுத்த இருந்த காலகட்டத்தில், நாசாவின் ஜெட் ப்ரோபல்ஷன் ஆய்வு மையத்திற்கு வருகை புரிந்தார். வேற்றுக் கிரகவாசிகள் பற்றிய அறிவியல் சிந்தனைகளின் முன்னோடியான, புகழ்பெற்ற அறிவியல் மேதை கார்ல் சகானின் (Carl Sagan) தீவிர ரசிகர் அவர். ஒரு கருத்தரங்கில், வேற்றுக்கிரக வாசிகளிடம் தகவல் பரிமாற்றம் செய்யும் முறைகள் பற்றி, சகான் பேசியதைக் கேட்ட பர்கஸ், பயனியர் திட்ட விஞ்ஞானிகளிடம் பூமியைப் பற்றிய தகவல்களைப் பதிந்து அனுப்பினால் என்ன என்று கேட்டுள்ளார். விஞ்ஞானிகளுக்கு அவரது யோசனை சரி எனப்படவே, உடனே அதை செயற்படுத்தினர். தகவல்களைப் பதிவு செய்து தரும் பணியை கார்ல் சகானே மேற்கொண்டார்.
வாயேஜர் விண்கலங்கள் சுமந்து சென்ற தகவல்கள்:
பயனியர் விண்கலங்களைத் தொடர்ந்து, வாயேஜர் விண்கலங்கள் 1977ஆம் ஆண்டில் விண்ணில் செலுத்தப்பட்டன. திட்டமிட்டபடி அவை இரண்டும், சனி, வியாழன், யுரேனஸ், நெப்டியூன் கோள்களை எல்லாம் ஆராய்ச்சி செய்துமுடித்த
பிறகு, அவற்றை சூரிய மண்டலத்துக்கு வெளியே அனுப்ப விஞ்ஞானிகள் முடிவெடுத்தாரகள். அதன்படி இன்றைக்கு வாயேஜர் 1 விண்கலம் சூரிய மண்டலத்தின் எல்லையான ஹீலியோபாஸைக் (Heliopause) கடந்து, 'Interstellar space' எனப்படும் நட்சத்திர மண்டலங்களுக்கு இடையிலான வெளியில் பயணித்துக்கொண்டிருக்கிறது. வருகிற 2019 –2020க்குள் வாயேஜர் 2 ஹீலியோபாஸைக் கடந்துவிடும். அவற்றை நம்மால் என்றைக்குமே தொடர்புகொள்ள இயலாது.
நமது சூரிய மண்டலம் அமைந்திருக்கும் பால்வீதி நட்சத்திர மண்டலத்தின் மையத்தை அது ஜாலியாக வட்டமிட்டுக் கொண்டிருக்கும்.
அப்போது, ஒரு வேளை அவை வேற்றுக் கிரகவாசிகளின் கண்களில்பட்டால், அவர்களுக்கு அந்த விண்கலங்கள் வரும் இடத்தைப் பற்றித் தெரிய வேண்டும் அல்லவா? அதற்காக வாயேஜர் திட்டத்தின்போதும், அதே கார்ல் சகான் தலைமையில் ஒரு தகவல் பெட்டகம் தயாரிக்கப்பட்டது.
கோல்டன் ரெக்கார்ட் (Golden Record) என்று அழைக்கப்பட்ட அந்தப் பெட்டகத்தில், ஒளி, ஒலி தகவல்கள் அடங்கிய தங்கத் தகடும், அவற்றை இயக்கும் கருவியும் வைக்கப்பட்டிருந்தன.
என்ன இருக்கின்றன?:
பூமியின் பல்வேறு பகுதிகளைச் சேர்ந்த மக்கள், 55 மொழிகளில் வணக்கம் சொல்லும் ஒலிகள், கடல் அலைகள், காற்று, இடி போன்ற ஓசைகள், பறவைகள், திமிங்கிலம் உட்பட சில விலங்குகளின் சப்தங்கள், பல்வேறு பகுதிகளின் பல்வேறு காலகட்டத்தைச் சேர்ந்த இசை இவையெல்லாம் அந்தத் தகடுகளில் பதிவுசெய்யப்பட்டுள்ளன. 55 மொழி வணக்கங்களில், 6000 ஆண்டுகளுக்கு முன்னர் சுமேரிய நாகரிகத்தில் பேசப்பட்ட அக்காடிய மொழியில் சொல்லப்பட்ட வணக்கமும் அடக்கம்.
விந்துவுடன் கருமுட்டை இணையும் அறிவியல் படம்; கருவில் இருக்கும் குழந்தை, குழந்தைக்குத் தாய் பாலூட்டுவது, வெவ்வேறு பகுதி மக்கள், ஐ.நா. கட்டடம், போக்குவரத்து நெரிசல், தாஜ்மஹால், நிலவின் படம், சூரியக் குடும்பக் கோள்களின் படங்கள் என மொத்தம் 115 படங்கள் அந்தத் தகட்டில் பதிவுசெய்யப்பட்டுள்ளன.
வாயேஜர் விண்கலங்கள், சூரிய மண்டலத்தின் எல்லையைவிட்டு வெளியேறி, நட்சத்திர மண்டலங்களுக்கு இடையிலான வெளியில் 40,000 ஆண்டுகள் பயணித்த பிறகே, இன்னொரு கோள் அமைப்பை எதிர்கொள்ளும் வாய்ப்பு வரும். அப்போது நம்மைப்போன்ற உயிரினங்களை அவை ஒரு வேளை எதிர்கொண்டால், நம்மைப் பற்றிய தகவல்கள் அவற்றிடம் போய்ச் சேரும்.
நாம் பதித்து அனுப்பிய தகடுகளைப் புரிந்து கொண்டு, என்றேனும் வேற்றுகிரக வாசிகள் நம்மைத் தொடர்பு கொள்ளலாம்! அப்படி நடக்கிறதோ இல்லயோ, அந்தக் கற்பனையே சுவையாக இருக்கிறது! அதுதான் மனிதமனம்!
Comments
Post a Comment